Wednesday, April 18, 2012

தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் பரிசு



2010 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களில் கணினியியல் துறையின் கீழான வகைப்பாட்டில் முத்துக்கமலம் இணைய இதழின் ஆசிரியர் தேனி எம். சுப்பிரமணி எழுதிய தமிழ் விக்கிப்பீடியா நூல் தேர்வு செய்யப்பட்டது. இந்நூலிற்கான சிறந்த நூலாசிரியர் பரிசுத் தொகை ரூபாய் முப்பதாயிரத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகிஅயவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் முத்துக்கமலம் இணைய இதழின் ஆசிரியர் தேனி எம்.சுப்பிரமணிக்கு வழங்கினார்.

கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதியன்று சென்னையிலுள்ள சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் டி. ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் , வருவாய்த்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என். ஆர். சிவபதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் தமிழ்த்தாய் விருதினை மதுரை தமிழ்ச் சங்கத்திற்கும், உ.வே. சா விருதினை புலவர் செ. இராசுக்கும், கபிலர் விருதினை பேராசிரியர் அ.அ.மணவாளனுக்கும், ஔவையார் விருதினை திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதிக்கும் வழங்கினார்.


தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் “தமிழ் விக்கிப்பீடியா” நூலாசிரியர் தேனி எம்.சுப்பிரமணிக்குப் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய போது எடுத்த படம்

2010 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் நூல்களில் 27 தலைப்புகளிலான வகைப்பாட்டில் சிறந்த நூல்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன. கணினியியல் துறையிலான வகைப்பாட்டில் முத்துக்கமலம் இணைய இதழ் ஆசிரியர் எழுதிய தமிழ் விக்கிப்பீடியா நூல் தேர்வு செய்யப்பட்டதற்கான சிறந்த நூலாசிரியர் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகை ரூபாய் முப்பது ஆயிரத்துக்கான காசோலையையும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் தேனி எம்.சுப்பிரமணியிடம் வழங்கிப் பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்த நூலைப் பதிப்பித்து வெளியிட்ட சிதம்பரம் மெய்யப்பன் பதிப்பகத்திற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் பாராட்டுச் சான்றிதழையும் பரிசுத் தொகை ரூபாய் பத்து ஆயிரத்துக்கான காசோலையையும் வழங்கினார்.

இவ்விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், திரையுலகப் பிரமுகரகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் தமிழ் வளர்ச்சி, இந்து சமய அறநிலையங்கள் மற்றும் செய்தி - மக்கள் தொடர்புத் துறைச் செயலாளர் முனைவர் மு. இராஜாராம் நன்றி தெரிவித்தார்.

No comments:

Post a Comment