Tuesday, January 18, 2011

தமிழ் விக்கிப்பீடியா, நூல் வெளியீடு



சென்னை குரோம்பேட்டையிலுள்ள சென்னை தொழில்நுட்ப நிறுவன (MIT) வளாகத்தில் நடைபெற்ற விக்கிப்பீடியா 10 ஆம் ஆண்டு விழாவில் தேனி.எம்.சுப்பிரமணி எழுதிய தமிழ் விக்கிப்பீடியா நூல் வெளியிடப்பட்டது.

இணையக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா பத்தாம் ஆண்டு விழா கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டன. இதில் வட அமெரிக்கப் பெருநிலப்பகுதியில் உள்ள 9 நாடுகளும், தென்னமெரிக்க பெருநிலப் பகுதியில் 11 நாடுகளும் ஐரோப்பிய பெருநிலப் பகுதியில் 40 நாடுகளும் ஆப்பிரிக்கப் பெருநிலப்பகுதியில் 17 நாடுகளும் ஆசியப் பெருநிலப் பகுதியில் 40 நாடுகளும், பெருங்கடல் பகுதியில் 2 நாடுகளும் என மொத்தம் 119 நாடுகளில் இதற்கான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்தக் கொண்டாட்டங்களில் அதிக அளவாக இந்தியாவில் 95 இடங்களிலும், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 32 இடங்களிலும், சீனாவில் 24 இடங்களிலும், பாகிஸ்தானில் 15 இடங்களிலும், ஈரான், ஜெர்மனி ஆகிய நாடுகளில் தலா 12 இடங்களிலும், பிற நாடுகளில் குறைவான இடங்களிலுமாக இந்த விழா நடைபெற்றன.

சென்னை குரோம்பேட்டையிலுள்ள சென்னை தொழில்நுட்ப நிறுவன (MIT) வளாகத்தில் நடைபெற்ற விக்கிப்பீடியா 10 ஆம் ஆண்டு விழாவிற்கு விக்கி மணியன் தலைமை தாங்கினார். செங்கைப் பொதுவன் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் ஆங்கில விக்கிப்பீடியா சார்பில் ரவிசந்தர், அனுஷா கோஸ், மலையாள விக்கிப்பீடியா சார்பில் ஜெஸ்ஸி பிரான்சிஸ், கணேஷ் கோபால், தமிழ் விக்கிப்பீடியா சார்பில் மாஹிர், பரிதிமதி ஆகியோர் விக்கிப்பீடியா குறித்து பேசினர்.

இவ்விழாவில் தேனி.எம்.சுப்பிரமணி எழுதிய தமிழ் விக்கிப்பீடியா நூலை கிழக்குப் பதிப்பக உரிமையாளர் பத்ரி சேஷாத்ரி வெளியிட, பத்திரிகையாளர் சுகதேவ் முதல் பிரதியையும், கவிஞர் இமாம் கவுஸ் மொய்தீன் இரண்டாம் பிரதியையும் பெற்றுக் கொண்டனர்.

விக்கிப்பீடியா நிறுவனர் ஜிம்மி வேல்ஸ் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இக்கூட்டத்திற்கு வந்திருந்தவர்க்லளுடன் உரையாடினார். இந்த உரையாடலின் போது தமிழ் விக்கிப்பீடியா நூல் வெளியீடு குறித்த மகிழ்ச்சியையும் நூலின் ஆசிரியர் தேனி.எம்.சுப்பிரமணிக்கு வாழ்த்தையும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் விக்கிப்பீடியா டீசர்ட் வழங்கப்பட்டது. முடிவில் தேனி.எம்.சுப்பிரமணி நன்றி கூறினார்.

நூல் வெளியீடு குறித்த நிகழ்படத் தொகுப்பு

No comments:

Post a Comment